Murasoli
Murasoli

Murasoli

This is an e-magazine. Download App & Read offline on any device.

news

                                          முரசொலி

                 கலைஞர் பெற்ற முதற்குழந்தை முரசொலி. அதற்கு அவர் தந்தையும் தாயுமானார். கலைஞரின் அத்தனை போர்க்குணங்களும் முரசொலிக்கு உண்டு. ஏனெனில் கலைஞரின் மற்றொரு வடிவமே முரசொலி. அவரின் எல்லா மெய்ப்பாடுகளையும் முரசொலி காலந்தோறும் எதிரொலித்தே வந்து கொண்டிருக்கிறது.

திராவிடர் இயக்கத்தின் போர்வாளாக திகழ்ந்து வருகிற முரசொலிக்கு இது மணிவிழா ஆண்டு மணிவிழா ஆண்டு என்பதால் இவ்வேட்டின் அறுபது ஆண்டு காலப் பணிகளை நினைவு கூர்வதும் அதன் சிறப்புகளை மீண்டுமொரு முறை அதன் வாசகர்களிடையே எடுத்து வைப்பதும் ஒரு வரலாற்றுத் தேவையே ஆகும்.

முரசொலி அரசியல் மேடையாக, சமுதாய அரங்கமாக, இலக்கியப் பூஞ்சோலையாக அடியெடுத்து வைத்த ஏடாகும். அது இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) பிறந்த ஏடாகும். இவ்வேடு முதலில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. கலைஞரது 18-ஆம் வயதில் முரசொலி (10-8-1942) முதன் முதலில் வெளியாயிற்று. அப்போது போர்க் காலமாதலால் அந்த துண்டறிக்கையை நல்ல தாளில் கூட அச்சடிக்க முடியவில்லை. கிடைத்த தாள்களில் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருந்தது. கிராப்ட் தாள்களில் கூட அச்சிடப்பட்டன. முரசொலி துண்டறிக்கைகள் என்பது இதழுக்குரிய (Periodical) பாங்குடன் வெளியிடப்படவில்லை. இவ்விதழ் கூட 1942 முதல்1944 வரை தான் வெளிவந்தது.

முரசொலியின் தலைப்பின் மீது ‘V’ என்று போடப்பட்டுள்ளதை பார்க்கலாம். உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் வெற்றிக்கு அறிகுறியாக Victory என்ற சொல்லின் முதலெழுத்தைப் போட்டு முரசொலி துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டு வந்தன. முரசொலி பிறக்கும் போதே முகத்தில் வெற்றியைப் பொறித்துக் கொண்டே பிறந்த ஏடாகும். எந்த அற்பங்களும் அந்த ஏட்டை வெற்றிகொள்ள முடியாது.

மூர்த்தி சிறிதாயினும் தொடக்கக் காலத்திலேயே இதன் கீர்த்தி மிகப் பெரியது. முரசொலி துண்டறிக்கை வெளியிடப்பட்ட நாள்களில் அவரின் பள்ளியிறுதி தேர்வு முடிவுறாமல் இருந்தது. அதனால் அவரது இயற்பெயரை அத்துண்டறிக்கையில் போட்டுக் கொள்ளாமல் சேரன் என்ற புனை பெயரில் கலைஞர் கருணாநிதி மறைந்திருந்தார். இத்துண்டறிக்கை ஏட்டை வெளியிட முரசொலி வெளியீட்டுக் கழகத்தினர் திருவாரூர் என்கிற அமைப்பை நண்பர்கள் குழாத்திடையே அவர் ஏற்படுத்தினார். அதற்குச் செயலாளராக திரு. கு. தென்னன் அவர்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்.

கலைஞர் சிந்திப்பதை செயற்படுத்த அந்த இளமைக் காலத்திலேயே ஒரு குழு அவர்பின்னே திருவாரூரில் இருந்தது. அவர்களில் முதன்மையானவர் தென்னன் இவரன்றி எந்தப் பணியையும் கலைஞர் திருவாரூர் வாழ்க்கையின்போது நிறைவேற்றியதில்லை. முரசொலி துண்டறிக்கைகளை வெளியிட பணம் திரட்டுவதும் திரட்டிய நிதிக்கேற்ப ஆயிரம் பிரதிகளுக்கு குறையாமல் அச்சிடுவதும் நிதி அதிகம் கிடைக்குமானால் ஆயிரத்திற்கு மேலும் அச்சிடப் படுவதுமுண்டு. அப்படி அச்சிடப்பட்டதை தமிழகம் முழுவதுமுள்ள இயக்கத் தோழர்களுக்கு அனுப்பி வைப்பதுமான பணிகளே தொடக்கக் காலத்தில் நடந்தன. இத்துண்டறிக்கையை கிருஷ்ணா பிரஸ் - திருவாரூர் என்கிற அச்சகத்தினர்தான் முதன் முதலில் அச்சிட்டனர். இதன் உரிமையாளரின் பெயர் கூ.ழு. நாராயணசாமிப் பிள்ளை. இவர் ஒரு காங்கிரஸ்காரர். இவரது வாரிசுகள் திருவாரூரில் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களது அச்சகத்தில்தான் முரசொலி துண்டறிக்கை இதழ் முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது.

கலைஞரின் முரசொலி அறிக்கைகளை காங்கிரஸ்காரரான நாராயணசாமி பிள்ளை அச்சிட்டு தந்தது வியப்பையே அளிக்கிறது. அதுவும் அந்நாளில்?

அதற்கு காரணம் என்ன?

கலைஞர் அந்த இளமைப் பருவத்திலேயே மற்றவர்களை தம்முடைய ‘வாக்குத் திறத்தாலே’ கவருகின்ற ஆற்றலைப் பெற்றிருந்தார். நாராயணசாமி பிள்ளை கலைஞரிடம் பேச்சுக் கொடுத்து உரையாடி மகிழ்வதிலே இன்பம் கண்டவர். இத்துண்டறிக்கைகள் ‘கனமான’ விஷயங்களையே தாங்கி வந்தன.

திருவாரூரை விட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவி சிதம்பரம் வரை அதன் புகழ் பரவலாயிற்று. சிதம்பரத்து தீட்சதர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை தான் ‘வருணமா? மரணமா?’ என்பது இக்கட்டுரை கலைஞர் எழுதியதால் தமது சொந்த பயணமாக கூட சிதம்பரம் செல்ல முடியாத நிலையை அது உருவாக்கியது. ஆம், சிதம்பரத்தில் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுவே கலைஞரின் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த வெற்றியை அவருக்கு முரசொலியே டவ .ட்டிக் கொடுத்தது. முரசொலி முதலாம் ஆண்டு விழாவை (1943) பேராசிரியர் அன்பழகனார், நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களையும் அழைத்து நடத்தினார் கலைஞர்.

இப்பணிகள் இப்படி நடந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே கலைஞர் ‘சாந்தா அல்லது பழநியப்பன்’ என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அதனால் கலைஞருக்கு நாடகத் துறையோடு டவ .டுபாடு தொடங்கியது. முரசொலி துண்டறிக்கை இச்சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் கலைஞரின் முரசொலி மீண்டும் 14-1-1948 முதல் ஒலிக்கத் தொடங்கியது.

இந்த முதல் முரசொலியின் வடிவம் - துண்டறிக்கை என்ற நிலையிலிருந்து மாறியிருந்தது. ‘கிரவுன் சைஸில்’ பருவ இதழுக்குரிய நிலைப்பாட்டைப் பெற்று வார இதழாக முரசொலி வெளிவந்தது. துண்டறிக்கையாக வெளிவந்த முரசொலியிலும் - திருவாரூரில் வார இதழாக மலர்ச்சியுற்ற முரசொலியிலும் ‘பெரியார் ஆண்டு’ என காலத்தை கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தியதே முரசொலி தான் முரசொலி வார இதழாக வெளியிடப்பட்டபோது அவ்விழாவிற்கு பாவலர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார்.

முதல் இதழை கரந்தை சண்முகவடிவேல் வெளியிட்டார். திருவாரூரில் வெளியிடப்பட்ட முரசொலி கருணாநிதி மின்னியக்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது. இவ்வச்சக உரிமையாளர் கருணை எம். ஜமால் இயக்கத் தோழர் என்றாலும் காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். அவரது கறார் குறித்து பின்னாளில் கலைஞர் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்துள்ளார். அச்சிட்ட இதழ்களை அவர் பணம் கொடுத்தால் தான் கொடுப்பார். அதற்காக ஒரு ‘குழுவே’ அவரிடம் போராடியது உண்டு. எப்படியோ இதழ்கள் வெளிவந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுவிடும். திருவாரூர் முரசொலி குறித்து கலைஞர் தமது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியிலும் உடன் பிறப்புக்கான மடல்களிலும் பொதுக் கூட்டங்களிலும் அப்போது அவர்பட்ட துன்பங்களை விவரித்து கூறியுள்ளார். திருவாரூரிலிருந்து வெளியிடப்பட்ட முரசொலி வார இதழ் என்பது நெடிய ஆயுளை உடையதல்ல. சற்றொப்ப 25 இதழ்கள் வெளியிடப்பட்டிருக்கும் - என்கிறார் தென்னன். இவ்விதழ்களில் பதினான்கையே பார்க்க முடிந்தது.

அந்நாள்களில் இருந்த மிகப் பெரிய அச்சியந்திர வளர்ச்சி என்பது மின்னியகத்தில் ஓடிய அச்சியந்திர வசதியாகும். எழுத்து கோக்கும் வசதி சாதாரணமானதுதான் (Hand Composing) இந்த வசதிகளைப் பெற்றே திருவாரூர் முரசொலி (வார ஏடு) வெளிவந்தது. இப்பத்திரிகையில் கலைஞர், இராம. அரங்கண்ணல், டி.கே. சீனிவாசன், வா.கோ. சண்முகம் (மா. வெண்கோ) என்.எஸ். இளங்கோ, நா.பாண்டுரங்கள், தில்லை வில்லாளன் ஆகியோர் எழுதினர்.

முரசொலி, இளைஞர்களிடையே திராவிடர் இயக்க உணர்ச்சியை ஊட்டுகின்ற ஒரு படைக்கலனாக அறிமுகமாயிற்று. அதன் வீச்சு போர்க் குணத்தையும் கிளர்ச்சித் துடிப்பையும் வளர்த்தெடுத்தது. இவ்விதழ் ஓரணா விலையில் (8 பக்கங்கள்) கிடைத்தது. ஓரணா என்பது இப்போதைய ஆறு காசுகளுக்கு சமமானது. சில பொது 12 பக்கங்கள் ஒன்றரை அணா விலையில் வெளியிடப்பட்டு வந்தது.

திருவாரூர் வார வெளியீட்டில் கலைஞர் சில கட்டுரைகளை எழுதினார். அவர் எழுதிய “சொர்க்க லோகத்தில்” எனும் கட்டுரை சுவையுள்ளவை. வரலாற்றுச் சிறப்புமிக்க தூத்துக்குடி மாநாட்டின் போது (1948) நடிகவேள் எம்.ஆர். ராதா அறிஞர் அண்ணா அவர்களை கடுமையாக தாக்கிப் பேசினார். இது குறித்து கலைஞர் வருந்தி ‘நடிகவேள் நாட்டில் நஞ்சு கலந்தார்’ எனத் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை திருவாரூர் முரசொலியில் வெளிவந்தது. இக்கட்டுரை அந்நாள்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் முரசொலி ஏடு கலைஞரின் திரைப்பட நுழைவால் தடை படலாயிற்று. அதன்பிறகு 1954-இல் சென்னையிலிருந்து வார வெளியீடாக வெளிவரத் தொடங்கியது. 1960-ஜூலை வரை இவ் வார வெளியீடுகள் தொடர்ந்தன.

ஆறாண்டுகள் தொடர்ந்து முரசொலி வார ஏடு தி.மு.கழகத்தார் நடத்திய பல பத்திரிகைகளில் முன்னணி பத்திரிகையாய் விளங்கிற்று. முரசொலியில் வெளிவந்த படைப்புகள் அத்தனையும் உரித்த பலாச் சுளையாய் இனித்தன.

கலைஞரின் எழுத்தாணி பதில்கள், பொன்முடிக்கு கடிதம், சுழல் விளக்கு போன்ற பகுதிகள் கிளர்ச்சித் துடிப்பை உண்டாக்கின.

கலைஞர் சிலபோதுத் தலையங்கங்களை எழுதினார். (புதுக்)கவிதைகளை எழுதினார். தொடர்கதைகள் எழுதினார். சிறுகதைகளை எழுதினார். குறளோவியத்தை முதன் முதலில் கலைஞர் முரசொலியில்தான் எழுதினார். எழுத்துகளின் அத்தனை வடிவங்களையும் ‘முரசொலி’க்காக பயன்படுத்தினார். கலைஞர் தாமாகவே கற்றறிந்து எழுதப் பழகிக் கொண்டவர். அதற்காக மாணவ நேசனும் (பள்ளி நாள்களில் கலைஞரே வெளியிட்ட கையெழுத்துப் பிரதி ஏடு) முரசொலி துண்டறிக்கைகளும் அவருக்கு நல்ல பயிற்சியை அளித்திருந்தன. அதனால் அவர் பல வடிவங்களை எழுதினார்.

இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி “கல்கி”யில் சக்கரவர்த்தி திருமகன் எனும் பெயரில் இராமாயணத் தொடரை எழுதி வந்தார். இத்தொடரை விமர்சனம் செய்து கலைஞர் முரசொலியில் எழுதினார். அக்கட்டுரைத் தொடருக்கு ‘சக்கரவர்த்தியின் திருமகன்’ எனும் தலைப்பைச் சூட்டி தமது பெயரை ‘மூக்காஜி’ என வைத்துக் கொண்டார். இத்தொடர் அக்கால கட்டத்தின் அரசியலையும் அதில் இராஜாஜியின் பங்கினையும் நகைச்சுவையுடன் விவரிக்கிறது.

கலைஞர் தமிழக சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பாகவே ‘சென்னை இராஜ்ஜியத்திற்கு’ ‘தமிழ்நாடு’ என பெயரிட வேண்டும் என்பது குறித்து இரண்டு பக்க கட்டுரையை முரசொலியில் (6-4-1956) எழுதினார்.

அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழ் கலைஞரது ‘இளமைப்பலியை’ முதன் முதலாக வெளியிட்டு கலைஞரை உற்சாகப்படுத்தியது. தொழிலாளர் மித்ரனிலும், குடியரசிலும் கலைஞர் எழுதினார். தொடக்க காலத்திலேயே கலைஞரது எழுத்துகள் பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மதிப்பைப் பெற்றன.

1938-இல் எழுதத் தொடங்கிய கலைஞர் இன்னமும் எழுதிக்கொண்டே இருக்கிறார். அதன் விளைவாக அவர் கட்டுரைகள், கேள்வி-பதில், சிறுகதைகள், கடித இலக்கியம், கவிதைகள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், பிற இலக்கிய வடிவங்கள், ஓரங்க நாடகங்கள், பெரும் நாடகங்கள், திரைப்படங்கள் என அவர் எழுதியவை தமிழ் மக்களின் நினைவில் என்றும் நின்று நிலைப்பவை ஆகும்.

கலைஞரின் பல்துறை ஆற்றல்களின் செயற்பாடு தான் முரசொலியின் நிலைபெற்ற வெற்றிக்கு காரணமாகும். அவர் எங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் முரசொலியோடு தொடர்புகொண்டு அதன் வெளியீட்டு வடிவம் குறித்து - உள்ளடக்கம் குறித்து அறிந்து கொள்ளாமல் இருந்ததில்லை. ஆலோசனைகளை அவர் வழங்காமல் இருந்ததில்லை. அவரது பத்திரிகை டவ .டுபாடு குறித்து காமராசரே வியந்து போற்றி இருக்கிறார்.

உவமைக் கவிஞர் சுரதாவின் கருத்து செறிவு மிக்க கவிதைகள் முரசொலியில் வெளிவந்தன. சொர்ணம் சிறுவர் சிறுமிகளுக்கான ‘பிறை வானத்தை’ எழுதினார். மாறனின் சிறு உருவங்கள்தான் முதன் முதலில் எழுதியதாக காணப்படுகின்றன. அவரது முதல் சிறுகதை காட்டுப் பூனை. ஆனால் அப்போதே முரசொலி வார இதழில் அவரது முழு ஆற்றல்களை வெளிப்படுத்துகின்ற இரண்டு தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. கிரேக்க புராணம், கலைத்தோட்டம் என்ற தொடர் கட்டுரைகள்தான் அவை. அந்தக் கட்டுரைகளில் எழுதியவரின் பெயர் இல்லை. நாம் அதனை கேட்டறிந்து கொண்டோம். கிரேக்கப் புராணம் - நம்நாட்டில் இருக்கிற இதிகாசங்களை நினைவுப்படுத்தியது. கலைத்தோட்டம் உலகச் சிந்தனையாளர்களை இலக்கியச் சிற்பிகளை வாரந்தோறும் - அறிமுகப்படுத்தியது. இக்கட்டுரைகளன்றி அரசியல் விமர்சன கட்டுரைகளையும் ஒரு சிலபோது தலையங்கப் பகுதிகளையும் மாறன் எழுதினார். திராவிட இயக்கத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள கொள்கை விளக்க கட்டுரைகள் இவரது சீரிய ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தின. முரசொலி பொங்கல் மலர்களிலும் அண்ணா மலர்களிலும் இவரது சிறந்த அரசியல் கட்டுரைகளும் ஓரங்க நாடகங்களும் இடம் பெற்றுள்ளன.

முரசொலி சென்னையிலிருந்து வார ஏடாக வரத் தொடங்கியதற்குப் பிறகு அதன் அலுவலகங்கள் பல இடங்களில் செயல்பட்டு பிறகு அப்போதைய மௌண்ட் ரோட்டில் இயங்கத் தொடங்கிற்று. அதாவது இப்போது சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இருக்குமிடத்தில்தான் முரசொலி பழைய கட்டிடம் இருந்தது. முரசொலி அலுவலகம் இங்கு வந்ததற்குப் பிறகுதான் கண்ணதாசனின் ‘தென்றல்’ அலுவலகமும் கே.ஏ. மதியழகனின் ‘தென்னகம்’ அலுவலகமும் அதே வரிசையில் இடம் பெற்றிருந்தன. இம்மூன்று அலுவலகங்களின் மேலும் கருப்பு சிவப்பு வண்ணத்தில் தி.மு.கழகக் கொடி கம்பீரமாக பறந்து அந்நாளைய ‘மௌண்ட் ரோட்டை’ அசத்திய காட்சி கழகத் தோழர்களையெல்லாம் அற்புதக் காட்சியாக காணச் செய்தது.

முரசொலி (சென்னை) வார ஏடு தொடங்கிய 7 மாதங்களில் தமிழக மக்களிடையே ஓர் இடத்தைப் பெறத் தொடங்கிற்று. அதனால் ஒரு சிலர் அதில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து அனுமதியில்லாமல் வெளியிட்டு விற்பனை செய்து வந்தனர். அதற்கான அறிவிப்பை 5-11-1954இல் முரசொலி வெளியிட்டு அத்தகைய வெளியீட்டாளர்களை எச்சரிக்கை செய்தது.

1954 முதல் 1960 வரையான முரசொலி வார ஏட்டில் பலர் அறிமுகப்படுத்தப்பட்டனர். எழுத்துத் துறைக்கு பழையவர்களானாலும் அவர்களுக்கும் முரசொலி ஒரு முன்னுரை வழங்கத் தவறவில்லை. சிறுகதை மன்னன் என்றும், கலைஞரால் சின்ன மருது என்றும் போற்றப்பட்ட எஸ்.எஸ். தென்னரசு முரசொலியில் முதல் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து வர்ணனைத் திறத்தால் உரை வளர்த்தால் நாளும் சிறப்பெய்தும் ஏ.கே. வில்வம், சிவ. இளங்கோ, அடியார், கயல் தினகரன், மா. பாண்டியன் போன்றோர் முரசொலியில் பங்கு கொண்டனர்.

முரசொலி வார ஏட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பலரில் மூன்று பேரை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். தி.மு.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த நாஞ்சிலார் பற்றி 25-6-1954 முரசொலி, “தோழர் நாஞ்சில் மனோகரன் அவர்கள் கழக முன்னணி வீரர் - எழுத்தாளர் - பேச்சாளர் என்பது மட்டுமல்ல சிறந்த கவிஞருங் கூட என்பதை தனது எழுச்சி மிக்க கவிதைகளால் சொல்லாமல் சொல்லுகிறார். அவரது கவிதைகள் முரசொலியில் இனி அடிக்கடி இடம் பெறும்” என கலைஞர் அறிமுகக் குறிப்பு எழுதியுள்ளார்.

அடுத்து 30-7-1954 முரசொலி வார ஏட்டில் சுரதாவின் கவிதையை வெளியிடுகின்றார் கலைஞர். அக்கவிதைக்கு அவர் ஒரு முன்னுரை - அறிமுக உரை எழுதினார். அவ்வுரை வருமாறு :-

“படுத்திருக்கும் வினாக் குறிபோல் மீசையுண்டு தமிழ் வளர்த்த பாண்டியர்க்கு” என்று ஒருமுறை கூறி கவிதா மண்டலத்தின் பாராட்டுதலை பெற்ற, தோழர் சுரதா பாரதிதாசனின் நேர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது மாணவருங் கூட வளமான சொற்கள் சுரதாவின் கவிதை வரிகளில் பொங்கி வழிவதை நாம் காண முடியும். பாரதி பாட்டு போன்ற பழைய தமிழ் ஏடுகளை பக்கத்திலே வைத்துக்கொண்டு பாட்டெழுதும் பழக்கமுடையவரல்ல. பல நாட்கள் காலத் திரையால் மறைக்கப்பட்டிருந்த அந்த நண்பரின் கவிதைகளை வாரந்தோறும் நீங்கள் சுவைக்கலாம் (கவிதையழகை காணுங்கள் - “விழி, முடிக்கும் காதல் திருமணம்” என்று குறிப்பிடுகிறார். ஆகா... புரோகிதரின் ஜாதகம் முடிவு செய்யும் திருமணமல்ல. பெற்றோரும் குறுக்கிட்டு முடிப்பதல்ல விழிகளே முடித்து விடுகிறதாம். இதுபோன்ற பொருள் ததும்பும் நீண்ட வாக்கியங்களை ஒரே வார்த்தையில் சொல்லும் முறை சுரதாவுக்கு தனிப்பண்பு)

முரசொலிக்கு இருக்கிற இன்னொரு சிறப்பை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சுயமரியாதை இயக்க காலத்தில் குடியரசில் எழுதிய பாரதிதாசன் தொடர்ச்சியாக எழுதினாரில்லை. ப. ஜீவானந்தம், கோவை அய்யாமுத்து போன்றோரின் கவிதைகளும் சில இதழ்களில் அவ்வப்போது இடம் பெறும். அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் முகப்புக் கவிதைகள் நிரம்ப இடம் பெற்றதுண்டு. அவற்றில் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஆனால் தொடர்ச்சியாக அவர் ஒருவரின் பாடல் மட்டும் வாரந்தோறும் எந்த இதழிலும் வெளிவந்ததில்லை. அதாவது அவர் தொடர்ந்து எழுதினாரில்லை. பொதுவாகவே கவிஞர்களிடம் கவிதை பெற்று வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் முரசொலி வார ஏட்டில் அதுவும் சுரதாவிடம் 30-7-1954 தொடங்கி 22 வாரங்களுக்கு (ஓரிரு வாரங்கள் தவிர்த்து) கவிதைகளைப் பெற்று தொடர்ந்து வெளியிட்டு இருப்பது வியப்புக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. ‘ஆனந்த விகடன்’ இதழில் கூட சுரதா சற்றொப்ப 17 வாரங்கள்தான் எழுதினார். இவ்வகையில் ஒரே கவிஞரின் பாடல்களை அந்தக் காலத்தில் அதிகமாக வெளியிட்ட பெருமை முரசொலியையே சாரும்.

இன்னும் பல பொருள்களைப் பற்றி நிரம்ப புத்தகங்கள் எழுதி குவித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் பி.சி. கணேசனை முரசொலி பின்வருமாறு அறிமுகப்படுத்தியது.

“தோழர் பி.சி. கணேசன் (பி.எஸ்.சி.பி.டி.) அவர்கள் அறிஞர் அண்ணாவைப் பற்றியும் மற்றைய தென்னாட்டு திலகங்களைப் பற்றியும் ‘சுதந்திரா’ ஆங்கில இதழில் ஒப்பற்ற கட்டுரைகளை தீட்டியவராவார். இந்தக் கட்டுரையில் அவர் பாரதிதாசன் கவிதைகளை விமர்சிக்கிறார்.”

இவர் விட்டும் தொட்டும் சில கட்டுரைகளை முரசொலியில் எழுதியிருந்தாலும் இவர் எழுதிய “மனிதனின் கதை” எனும் தொடர் கட்டுரை மிகச் சிறந்த கட்டுகளாகும். அவற்றில் அவர் உலக வரலாற்றை - சிந்தனையாளர்களை - இன்ன பிற செய்திகளையெல்லாம் தொகுத்து அளித்த சிறப்பு என்றும் மறக்க முடியாதது. இப்போதும் முரசொலியைப் புரட்டினால் அக்கட்டுரைகளை படிக்கலாம்.

1948-களில் முரசொலியில் ஒரு எழுத்தாளர் வரிசை உருவானது போலவே 1954-60களில் சென்னை வார இதழ்கள் வெளிவந்த நாள்களில் இயற்கை கடனை அடைத்துவிட்ட நாஞ்சில் மனோகரன், மாறன், முல்லை சத்தி, எஸ்.எஸ். தென்னரசு, சுரதா, ஏ.கே. வில்வம், சொர்ணம், அமிர்தம், செல்வம், சிவ. இளங்கோ, அடியார் ஆகியோரின் எழுத்து வடிவங்கள் இடம்பெற்று ஓர் எழுத்தாளர் வரிசை உருவாக முரசொலி காரணமாக இருந்தது.

முரசொலி சென்னையிலிருந்து வார இதழாக மலர்ச்சியுற்று வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் தி.மு.கழக ஏடுகள் பல வெளி வந்து கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றின் உள்ளடக்கமும் கொள்கையை எடுத்து விளக்குவற்காக ஒவ்வொரு கோணங்களில் தகவல்களை முன் வைத்து இயங்கின. அவைகளை இயக்கிய பெரும்பாலோர் அதனை மேலும் முன்னெடுத்துச் செல்லுவதற்கான முயற்சியோ பின்புலமோ அல்லது அதனை செம்மையாக வெளியிடக்கூடிய நிலையோ இல்லாதவர்களாகவே இருந்தனர். எப்படி இருப்பினும் முரசொலி ஏடு தி.மு.கழகத் தொண்டர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்தது.

தி.மு.கழகத்தின் மன்றங்கள், படிப்பகங்களிலேயும் ‘முரசொலி’ வார இதழுக்காக காத்திருந்து வாசகர்கள் படிப்பர். சில இடங்களில் முன்பின் என்ற வரிசை கருதி படிப்பதற்கு வாசகர்களிடையே சிறு சர்ச்சைகளம் நிகழுவதுண்டு.

முரசொலி வார வெளியீட்டில் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் விதமாக அதன் உள்ளடக்கம் ஒரு சிறப்புத் தன்மை பெற்றிருக்கும். படிப்பதற்குரிய பகுதிகளின் பெயர்கள் - தலைப்புகள் வாசகனை கவர்ந்திழுத்தது. முரசொலி ஒரு பொதுப் பத்திரிகை என்கிற தன்மையிலிருந்து மாறுபட்டதாகும். ஏனெனில் அது தி.மு.கழகத்தின் கொள்கை வழி நின்று பத்திரிகை களத்தில் போராடியது போராடியும் வருகின்றது. அதனால்தான் எதைப் பற்றியும் முரசொலியில் எழுதுவது சாத்தியமானாலும் அதற்கு ஓர் அளவுகோலாக எந்த விஷயம் பற்றி எழுதினாலும் ‘கழகத்தை’ அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் முரசொலி இயங்கியது இயங்கியும் வருகிறது.

முரசொலியின் நிறுவனரும் முதல் ஆசிரியருமான கலைஞர் இயற்கையின் மைந்தர் பிறவி எழுத்தாளர் எதையும் கலை வடிவப்படுத்தி சொல்வதில் அவருக்கிணை அவரே இளமை பருவந்தொட்டே அவரோடு இரண்டறக் கலந்துவிட்ட அந்த உணர்வுதான் முரசொலியின் மூலதனங்களில் முதன்மையானதாகும். முரசொலி திராவிடர் கழக ஏடாக திகழ்ந்த போதும் திராவிட முன்னேற்றக் கழக ஏடாக திகழ்ந்து வருகின்ற போதும் விஷயங்களை அது எடுத்து வைக்கிற பாங்குதான் சிதையாச் சீரிளமை திறமுடையதாக திகழ்ந்து வருகிறது. கலைஞர் ஆசிரியர் என்ற முறையில் அதன் வாசகர்களை உருவாக்கி விடுவதோடு இல்லாமல் அதனைப் பற்றிய விமர்சனங்களையெல்லாம் கேட்டறிவதில் ஆர்வம் காட்டி இதழை செம்மைப்படுத்தினார். வளர்த்தெடுத்தார் புகழுக்குரிய ஏடாக வரலாற்றில் ஒரு பதிவை ஏற்படுத்தினார்.

முரசொலி வார இதழில் ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கிற்று. முரசொலி சென்னை வாரப் பதிப்பின் முதல் இதழிலேயே (2-5-54) எழுத்தாணி கேள்வி பதில்கள் இடம் பெற்றிருந்தன. ‘சுழல் விளக்கு’ எனும் பகுதி 10-12-54 முதல் வெளி வரலாயிற்று. இப்பகுதியில் விமர்சனக் கட்டுரைகளும் கேள்வி-பதில்களும் இடம் பெற்றன.

கலைஞர் கடிதம் இன்றைய தினம் தமிழ்நாட்டை இயக்குகிற சாதனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இம்முறையை இவர் 30-7-1954இல் தொடங்கினார். அப்போது அரசியல், இலக்கியம் மற்றும் இதரப் பிரச்சினைகளை ‘பொன்முடிக்கு கடிதம்’ என்கிற தலைப்பில் சுவை சொட்ட சொட்ட எழுதினார். கலைஞர் ‘நீட்டோலை’ என்கிற பெயரில் ஒருகடிதத்தை அறிமுகப்படுத்தினார். இக்கடிதம் 18-5-1956 முதல் முரசொலியில் இடம் பெற்றது. மறவன் மடல்கூட முரசொலி நாளேட்டில் (11-1-69)தான் அறிமுகமாயிற்று. இம்மூன்று கடித வடிவங்களுக்குப் பிறகே ‘உடன் பிறப்பே’ என கலைஞர் விளித்து எழுதும் தற்போதைய கடித வடிவம் வெளி வரலாயிற்று. கலைஞரின் ‘பேனா ஓவியம்’ அரசியல் கலைக் களஞ்சியமாகும்.

முரசொலியில் வெளியாகும் வாசகர்களின் கடிதங்கள் ‘உங்கள் பார்வை’ என்ற தலைப்பில் தற்போதும் வெளியிடப்படுவதை காணலாம். இப்பகுதி 22-4-1955 முதல் முரசொலியில் இடம் பெறலாயிற்று. முரசொலியில் மேலும் சுவையை அளித்த பகுதிகள் ‘இயல் இசை கூத்து’ ‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்பவைகளாகும். இப்பகுதிகள் முறையே 8-4-1955, 22-6-1955 ஆகிய இதழ்களில் தொடங்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.

‘இயல் இசை கூத்துப்’ பகுதியில் திரையுலகச் செய்திகள், விமர்சனங்கள் சிலபோது அது தொடர்புடைய கட்டுரைகள் இடம் பெற்றன. அவை திரையுலகச் செய்திகளை தருவதோடல்லாமல் அத்துறையின் சில வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கமாய் இடம்பெற்றிருந்தன.

‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்ற கட்டுரை உரையாடுவது போன்ற அமைப்புடையது. கழகத் தோழனும் காங்கிரஸ் தோழனும் சந்தித்துக்கொண்டு உரையாடுவது என்ற போக்கில் இடம் பெற்றுள்ள அந்த கட்டுரைகள் தொடர்ந்தும் விட்டு விட்டும் முரசொலியில் இடம்பெற்று வந்தன. நாளேடான பிறகும் சிலபோது வெளியிடப்பட்டு வந்தது. இக்கட்டுரைகள் அடிமட்ட கழகத் தோழரை டவ .ர்ப்புக்குரியவராக்கிற்று. அதில் எழுதப்பட்ட தகவல்களை கலை நிகழ்ச்சிகளாக்கி மேடைதோறும் இசைத்தவர்களுமுண்டு. ஒருவருக்கொருவர் பேசுகிறபோது அதில் எழுதப்பட்டுள்ளவைகளை விவாதித்துக் கொண்டதுமுண்டு.

முரசொலி வார இதழ்கள் சிலபோது கலைஞரின் கவிதை நடை சொற்கோலங்களை தாங்கி வெளி வருவதுண்டு. குறளோவியம் அதன் வீச்சாக தோன்றிற்று எனலாம். அவர் எழுதிய முதல் குறளோவியம் முரசொலி வார வெளியீட்டில் இடம் பெற்றதே ஆகும். முரசொலியின் தலையங்கங்கள் கழகத்தவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்த அரசியற் கல்வியைப் புகட்டியது. தலையங்கப் பகுதிக்கு மேலே இயக்கக் கொள்கைகளை இருவரிகளில் முழக்கமாக்கி (கவிதை வரிகளில்) கலைஞர் வெளியிட்டு வந்தார். அந்த முழக்கங்களை வாய்விட்டு பிறர் கேட்க படித்தாலோ முழங்கினாலோ படித்வர்க்கும் கேட்பவர்க்கும் - அம்முழக்கத்தின் பால் டவ .டுபாடு தோன்றாமல் இருக்க முடியாது.

முரசொலியின் கேலிச் சித்திரங்கள் (கருத்துப்படம் - கார்டூன்கள்) மிகச் சிறப்பானவை ஆகும். அவை கால நிலைக்கேற்ப கருத்துக்களை எதிரொலிப்பனவாகவும் தி.மு.கழகத்தின் நிலைப்பாட்டில் நின்று கொள்கைகளை விளக்குவனவாகவும் இருந்தன. அதே நிலைப்பாடு இப்போதும் முரசொலியில் தொடருவதைக் காணலாம். முரசொலியின் கேலிச் சித்திரங்கள் பல சந்தர்ப்பங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கழகத் தொண்டர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் அதன் தாக்கம் சிறப்பிற்குரியதாய் இருந்தது.

தி.மு.கழகத்தில் டவ .வெ.கி. சம்பத் அறிஞர் அண்ணாவின் காலத்தில் (1961) ஒரு பிளவை ஏற்படுத்தினார். இந்தப் பிளவை பிரச்சார ரீதியில் தி.மு.க. எதிர்கொண்டது. பத்திரிகைகள் பிளவை ஆதரித்தன. பெரிதுபடுத்தின. இந்து, மெயில், மித்திரன், நவஇந்தியா, தினமணி போன்ற பத்திரிகைகளுக்கு தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு அவர்களுக்கு ‘தீபாவளிப் பண்டிகையைப்’ போன்றே சிறப்புக்குரியதாக இருந்தது. தி.மு.கழகத்தின் நாளேடுகளாக நம்நாடும், முரசொலியுமே களத்தில் நின்றன. முரசொலியை நிறுத்திவிடக்கூடிய சூழ்நிலை உருவான இந்தச் சூழ்நிலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பத்திரிகையை தொடர்ந்து வெளி வர வேண்டும் என்று விரும்பினார்கள். அந்தச் சூழ்நிலையிலும் அறிஞர் அண்ணா அவர்களுடைய கட்டளையை ஏற்று முரசொலியை தொடர்ந்து வெளியிட்டு வந்தார் கலைஞர். இந்தக் கால கட்டத்தில் முரசொலி இதர நாளேடுகளைப் போல காலையில் நம் கைக்கு கிடைத்து விடக்கூடிய சூழ்நிலையில் வெளிவரவில்லை. சென்னையில் கடைகளில் கிடைப்பதற்கு காலை 10 மணிக்கு மேல் ஆகிவிடும். இருப்பினும் அப்போதைய கழகத் தோழர்கள் முரசொலியை வாங்கிப் படிப்பதை ஒரு கடமையாகக் கொண்டு செயல்பட்டார்கள். அப்போது டவ .வெ.கி. சம்பத்தின் கருத்துகளுக்கு எதிராகவும் அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவும் முரசொலியில் கட்டுரைகள், கேள்வி-பதில்கள், பெட்டி செய்திகள், கேலிச் சித்திரங்கள் என வெளியிட்டு தி.மு.கழகத்தைக் காப்பாற்றிய பெருமை முரசொலிக்கே உண்டு.

தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தி.மு.கழகம் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி பிப்ரவரி 20, 1956இல் பெரியதொரு வேலை நிறுத்தத்தை தலைமையேற்று நடத்திற்று. தேவிகுளம் - பீர்மேடு என்பது தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய எல்லைப்புற ஊர்கள். அதனை கேரள மாநிலம் தன்னோடு இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட போராட்டம் இது. அதனை தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டும் என்பது தமிழர்களின் ஒருமித்த கருத்தாய் இருந்ததால் அந்தப் போராட்டத்தை - வேலை நிறுத்ததை முன்னின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம் இப்போராட்டம் குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு கருத்தறிவித்திருத்தார்.

“இந்த கண்ணியம் மிகுந்த கூட்டணியைக் கண்டு திகில்கொண்டு, கூட்டணி மீது மெத்த கோபம் கொண்டிருக்கிறார், சென்னை மாநிலத்தை ஆள்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் காமராசர் அவரது கோபத்தைப் பார்த்து நான் சிரிக்கின்றேன். அவரது போக்கினை தமிழ்நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கடந்த பிப்.20இல் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பதால் ”

அறிஞர் அண்ணாவின் இக்கருத்தை வெளியிட்ட முரசொலி 24-2-1956-இல் தமிழர் கிளர்ச்சி என்ற தலையங்கத்தை விளக்கமாக எழுதியது. அப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை அத்தலையங்கம் சிறப்புற விளக்கிற்று.

முரசொலி வார வெளியீட்டில் நகைச்சுவைப் படங்கள் துணுக்குகள் என நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் மகாபாரதக் கதையை ‘படங்களாக’ வரைந்து (அதன் ஆபாசத்தை விளக்கும் பொருட்டு) வாரந்தோறும் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் அதனை முழுவதுமாக வெளியிட முடியவில்லை. (மகாபாரதம் ஆயிற்றே ) தி.மு.கழகத்திற்கு வலுவை உண்டாக்குவதற்காக அதன் கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் உடன்பாடான கேலிச்சித்திரங்களை ‘சங்கர்ஸ் வீக்லி’ ‘சுதேசமித்திரன்’ ‘தினத்தந்தி’ ‘ஆனந்த விகடன்’ போன்ற பத்திரிகைகளிலிருந்து திரும்ப எடுத்து முரசொலியில் மறுவெளியீடு செய்வதும் அதற்கு அடிக்குறிப்பு எழுதுவதும் முரசொலியின் சிறப்புகளில் ஒன்றாகும். தி.மு.கழகத்தார் நடத்திய மற்ற பத்திரிகைகளில் இத்தகையச் சிறப்பை தொடர்ந்து காணமுடியாது. இன்றும் முரசொலியில் இந்தச் சிறப்பைக் காணலாம்.

முரசொலி வார ஏடாயிருந்த கால கட்டத்திலேயே கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு இரங்கற் குறிப்புகளையும் செய்திகளையும் தலையங்கங்களையும் எழுதி வெளியிட்டு தமிழ் இன உணர்வை முரசொலி போற்றி வளர்த்ததை சிறப்பாக குறிப்பிட வேண்டும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாவலர் பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோர் இயற்கையோடு இணைந்தபோது முரசொலி, அவர்கள் குறித்து அந்நாள்களில் வழங்கிய புகழ் மலர்களை வெளியிட்டு பத்திரிக்கை துறையில் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கியது.

முரசொலியின் சிறப்பு வெளியீடுகளாக பொங்கல் மலர், அண்ணா மலர் என வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அவை சிறப்பிதழ்களாக மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. இம்மலர்களைப் பற்றிய தகவல்களை தொகுப்புரையுடன் தனித் தலைப்பின் கீழ் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.

முரசொலி 17-9-1960 முதல் நாளேடாக வெளிவரலாயிற்று. அதன் பணிகள் முன்னிலும் அதிகமாயிற்று. முரசொலி வணிக நோக்குடைய நாளேடல்ல. அது ஒரு இயக்கத்தின் கொள்கையை, கருத்துக்களை, சமுதாயத்தில் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை எடுத்துச் சொல்ல வந்த ஏடாகும். இதன் பலமும் பலவீனமும் இதுதான் முரசொலி நாளேடாக தொடங்கப்பட்ட நாட்களில் ‘நம்நாடு’ தி.மு.கழகத்தின் அதிகார பூர்வமான ஏடாக செயல்பட்டு வந்தது. அது 1953-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தாலும் அதன் பரப்பு விரிந்த அளவுடையதாய் இல்லை.

‘நம்நாடு’ மாலைப் பதிப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. அதுவும் சிறிய அளவில் வெளியிடப்பட்டு வந்தது. நம்நாடு இதழின் வளர்ச்சி குறித்து முரசொலி (வார) ஏடு ‘நம்நாடு நமது ஏடு’ எனும் தலையங்கத்தை எழுதி - அதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் ‘தனி அரசு’ இதழும் நாளேடாக மலர்ச்சியுற்று 1959 முதல் வெளிவந்து கொண்டிருந்தது. இவ்வேடுகளின் பங்களிப்பு என்பது கழகத்தின் அரசியல் பணிகளை மக்கள்முன் வைப்பதற்கு போதுமானது என்று சொல்ல முடியாது. இத்தகைய சூழ்நிலையில்தான் முரசொலி நாளேடாக ஒலிக்கத் தொடங்கியது. 1960-67 வரை அதாவது பொதுத் தேர்தல் நடந்து முடியும் வரை முரசொலியின் பணி மகத்தானது. அது எதிர்கொண்ட போராட்டம் எளிதானதல்ல. முரசொலியை எதிர்த்த எதிரணியினரும் சாமான்யர்கள் அல்லர். முரசொலி நாளேட்டின் முதற்கட்டம் என்பது 1960-67தான்

கலைஞரின் முதற்குழந்தையான முரசொலியை அவரது நினைப்பாலும் உழைப்பாலும் அவர் வளர்த்தெடுத்தார். அவரது திரையுலக செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு ஆகியவை மூலம் அவர் டவ .ட்டிய பொருள்களையும், அவரது கட்சிச் செல்வாக்கு - எழுத்தாற்றல் அனைத்தையும் முரசொலிக்காகவே பயன்படுத்தினார். அதனால் முரசொலி செல்வாக்குள்ள போர்க்கருவி ஆயிற்று. எதிரிகளை களத்திலிருந்து மிக எளிதாக முரசொலி அப்புறப்படுத்தியது. இத்தகைய கூட்டுத்திறன் கலைஞர் ஒருவரிடமே இருந்தது. அவர் அதற்காக ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்தார். இந்த அடிப்படைகள் தான் முரசொலியின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன.

1960-களில் தி.மு.கழகம் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி வந்த நேரம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழரசு கழகம், நாம்-தமிழர் இயக்கம் என்று அரசியல் கட்சிகளும், தினத்தந்தி, நவமணி, இந்து, மெயில் போன்ற மிகப் பெரும் புகழ் வாய்ந்த ஏடுகளும் தி.மு.கழகத்தை அதன் கொள்கைகளை - அதன் தலைவர்களை மிகக் கடுமையாக தாக்கி வந்தன. நாம் குறிப்பிட்ட அத்தனைக் கட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பதிலை அளித்த கழக நாளேடு முரசொலிதான்!

கலைஞரின் பெயரில் இயற்கையாகவே நிதி அமைந்துள்ளது. அதற்கேற்ப தி.மு.கழகம் தோன்றிய இரண்டு ஆண்டுகளில் நிதி சேர்த்துக் கட்சிக்கு அளிக்கும் பணி, புயல் நிவாரண நிதி திரட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் கலைஞருக்கு கட்டளை பிறப்பித்தார். இப்பணியின் வளர்ச்சி அவரைப் கழகத்தின் பொருளாளர் நிலைக்கு உயர்த்தியது. இவருடைய இந்த வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் உட்கட்சி பூசலை உருவாக்கினார்கள். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பொருளாளர் பதவியை விட்டு அவர் விலகினார். பிறகு அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளின்படி பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இத்தகைய உட்கட்சிப் போராட்டங்களை விளக்குவதற்கும் எதிரிகளுக்குப் பதிலளித்து, கட்சியைக் காப்பாற்றுவதற்கும் முரசொலி தனது பங்களிப்பை மிகக் கணிசமான அளவில் ஒவ்வொரு கட்டத்திலும் செயலாற்றி உண்மை நிலையை விளக்க உதவிற்று.

1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முரசொலி ஆற்றிய பணி காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை ஒடித்து, 1967 பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றிவாகைச் சூடக் காரணமாக இருந்தது. அறிஞர் அண்ணா நோய் வாய்ப்பட்ட போதும் அவர் மரணமுற்ற போதும் முரசொலியின் பயன்பாடு அளவற்றது. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் சட்டமன்ற ஆளும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சரானார். அது முதற்கொண்டு கலைஞரின் அரசியல் சாதனைகளை மக்களுக்கு விளக்குவதிலும் கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதிலும் முரசொலி மிக முக்கியப் பாத்திரத்தை வகித்தது.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டார். அச்சமயத்தில் தி.மு.கழகத்தின் சார்பில் கருத்துக்களை எடுத்து வைப்பதற்கும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புரைப்பதற்கும் முரசொலி பத்திரிகை எடுத்துக்கொண்ட முயற்சிகள் எளிதானவையல்ல. அதேபோல புரட்சி நடிகரை அவரது செய்திகளை 1954 முதல் வெளியிட்டு அவரை மிகப் பெரிய ‘புரட்சிக்காரராக’ சித்தரித்துக் காட்டிய பெருமையும் முரசொலிக்கே உண்டு.

பிரதமர் இந்திரா அம்மையார் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதனை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்! நெருக்கடி நிலையை எதிர்த்து தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்களை முரசொலி ஏடு வெளியிட்டது. அதுமட்டுமல்ல, ‘சர்வாதிகாரியாகிறார் இந்திரா’ எனும் கேலிச் சித்திரத்தை வெளியிட்டு இந்திரா காந்தியின் கவனத்தை மட்டுமல்ல உலகத்தாரின் கவனத்தையும் கவர்ந்தது முரசொலி ஏடு.

முரசொலி ஏட்டில் வெளிவந்த அந்தக் கார்ட்டூனை - நியூஸ் வீக் எனும் பத்திரிகை வெளியிட்டதால் முரசொலி ஏடு உலகப் புகழ் பெறலாயிற்று. இதனால் அதன்ஆசிரியராக இருந்த முரசொலி மாறன் நெருக்கடி காலத்தில் சிறையில் பெருத்த பாதிப்பிற்கு ஆளானார்.

இதுமட்டுமா? நெருக்கடி நிலையின் போது பத்திரிகைக் தணிக்கை நடைமுறையில் இருந்தது. இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது முரசொலி! அந்த நேரத்தில் செய்திகளை வெளியிட முடியாத சூழ்நிலையை ‘வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்ற தலைப்பை பெரிதாகப் போட்டு முரசொலி அக்கால நிலையை மக்களுக்கு உணர்த்திக் காட்டிற்று. இதே கால கட்டத்தில வெளியிடப்பட்டு வந்த கலைஞரின் இலக்கியக் கடிதங்கள், கரிகாலன் பதில்கள், அண்ணா சமாதிக்கு வர இயலாதோர் பட்டியல் (மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை முரசொலி அவ்வாறு நெருக்கடி நிலையின்போது அடையாளம் காட்டிற்று) போன்ற பகுதிகள் எத்தகைய உணர்ச்சியை கழகத் தோழர்களிடம் ஏற்படுத்தியிருந்தன என்பதை எண்ணிப் பார்த்தால் இப்போது கூட மெய்சிலிர்க்கின்றது. இவ்வுணர்ச்சியை தோற்றுவிக்க காரணமாயிருந்தது முரசொலி!

நெருக்கடி நிலையின்போது முரசொலி பத்திரிகை கழகத் தொண்டனுக்கும் தலைவருக்கும் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொடுத்தது. கழகத் தோழர்கள் பேருந்துகளின் மூலம் அணி அணியாக சென்னைக்கு வந்து கலைஞரைப் பார்த்தனர். அவரிடம் சர்க்காரியா வழக்கு நிதி தந்தனர். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘நாங்கள் உங்களோடுதான் இருக்கின்றோம். நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம்’ என்கிற உறுதியை அவர்கள் தலைவருக்கு வழங்கினர். அத்தருணத்தில் கழகத் தோழர்களின் இவ்வுணர்ச்சி வெள்ளம் கலைஞருக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. இச்செய்திகளையெல்லாம் தொகுத்து வழங்கியது முரசொலி! தி.மு.கழகத்தின் நிலை - பிரச்சினைகளின் மேல் தலைவரின் கருத்துகள் தொண்டர்களின் அணிவகுப்பு ஆகியவைகளை குறித்தெல்லாம் மக்கள் அறியுமாறு செய்த பெருமை முரசொலிக்கே உண்டு. பத்திரிகைச் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டபோது முரசொலி கிளர்ந்தெழுந்தது.

ஒரு கட்டத்தில் கலைஞர் வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது என்றும் வழக்கு குறித்து வழக்கறிஞர்களோடு விவாதிக்க வேண்டி இருக்கிறது என்றும் சர்க்காரியா விசாரணை கமிஷன் செலவு நிதி வழங்க சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறும் தலைமை நிலையப் பொறுப்பாளராக பணியாற்றிய திரு. எல். கணேசன் கேட்டுக் கொண்ட அறிவிப்பு முரசொலியில் வெளியாயிற்று. இவ்வறிவிப்பிற்குப் பிறகும் கழகத் தோழர்கள் சென்னைக்கு வருவதை தவிர்த்தார்களில்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். நிதியை வழங்கினார்கள். அவர்களால் என்னென்ன வழங்க முடியுமோ அவற்றையெல்லாம் தலைவருக்கு வழங்கினார்கள். இதனை 21-8-1976 - முரசொலி கீழ்க்காணும் பாடலை வெளியிட்டு அம்மக்களைப் பாராட்டி கழகத்திற்கு ஓர் உத்வேகத்தை வழங்கிற்று.

“நித்த நித்தமும்

நெஞ்சத் தன்பை

புத்த முதாகப்

பொழியும் தோழர்

சேய்ச் செல்வமுடன்

திரளும் தாய்மார்

வாயினால் அல்ல

மனத்தினால் அன்பை

கழகத்து முதல்வர்

கலைஞருக்கிங்கே

வழங்கிடு கின்றார்

வான்மழை போலே!

மலைபோல் அன்பை

மக்கள் அளிக்கையில்

நிலை குலைந்திடுமோ?

நிமிர்ந்தெழும் கழகம்!”

இப்பாடலை வெளியிட்டு முரசொலி ஓர் எழுச்சியை - கழகத் தோழர்களிடையே உருவாக்கிற்று. நெருக்கடி கால கழகப் பணிகள் குறித்து முரசொலியின் பணி மிக அளப்பரியது. இப்பாடல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே 7-7-1976-இல் ‘காத்திடும் கரங்களன்றோ’ எனும் உடன்பிறப்புக்கான கடிதத்தில் - அதுவரை கழகத் தோழர்கள் 109 பேருந்துகளில் வருகை தந்து நிதி வழங்கியுள்ளதையும் அவர்களின் ஊர்களின் பெயர்களையும் கலைஞர் குறிப்பிடுகின்றார்.

கலைஞர் இக்கடிதம் எழுதுவதற்கு முன்பு சிதம்பரம் சென்று (ஜெயங்கொண்டான்) வேணு அவர்களுடைய இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அப்போது மக்கள் திரண்டு வந்து அவர்க்கு சர்க்காரியா வழக்கு நிதியை வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சிகளை ‘சிதம்பரம் போகாமல் இருப்பேனா?’ எனும் கடிதத்தில் முரசொலியில் கலைஞர் சுட்டிக் காட்டும்போது ‘ஒடுக்கப்பட்ட நந்தனையும்’ நினைவுபடுத்துகிறார். இவற்றையெல்லாம் மக்கள் முன்வைக்க முரசொலி பயன்பட்டது.

நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் (1977) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சரானார். முரசொலியின் பணிகள் முன்னிலும் அதிகமாயிற்று. கலைஞர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். அவரது பணியின் வெம்மையையும் (பிரச்சார) உத்திகளையும் எம்.ஜி,ஆரால் எதிர்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எம்.ஜி.ஆர். எதிலும் தெளிவற்றவராக குழப்பமான சிந்தையை உடையவராகவே செயல்பட்டார். 1977 ஜூனுக்கு முன்பு - அதாவது ஏப்ரலில் நாவலர் விலகியதையொட்டி எழுந்த சிக்கலைப் பற்றி முரசொலி செய்தி வெளியிட்ட பாங்கை - அரசியல் நோக்கர்கள் கண்டு முரசொலியின் நடுநிலையை வியந்தார்கள். இதற்குப் பிறகே தேர்தல் நடைபெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானார். 1980 - ஜனவரி வரை தான் எம்.ஜி.ஆர். ஆட்சி ஆட்டங்காணாமல் நடைபெற்று வந்தது. அதற்குப் பிறகு தி.மு.க. - இ.காங்கிரஸ் கூட்டணியின் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்து மத்தியில் இந்திராவின் அரசு அமையவே - இயல்பாகவே குழப்பத்திற்கும் தெளிவின்மைக்கும் ஆட்பட்ட எம்.ஜி.ஆர் சலிப்பிற்கு ஆளானார்.

மேலும் இந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் விலகி தி.மு.க.வில் சேரத் தொடங்கினார்கள். இதனால் மேலும் சலிப்படைந்த எம்.ஜி.ஆர் நடிப்புத் தொழிலுக்கு செல்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டார். 1977-80க்கும் இடையில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவரது முதற்கட்ட ஆட்சியின்போதே ஊழலில் சிக்கினார். இதுகுறித்து குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியல் ஒன்றை குடியரசுத் தலைவரிடம் கலைஞர் கொடுத்தார். அதுகுறித்து முரசொலி ஏடு வெளியிட்டுள்ள (16-2-1980) பேட்டியில் கலைஞர் எவ்வளவு நயந்தோன்ற கூறுகிறார் என்று பாருங்கள்.

செய்தியாளர் :- எம்.ஜி.ஆர் அரசு மீதான குற்றச்சாட்டுப் பட்டியலைக் குடியரசுத் தலைவரிடம் அளித்தீர்களே, இதன் நகல் பத்திரிகைகளுக்கு கிடைக்குமா?

பதில் :- இப்போது கொடுப்பதற்கில்லை.

செய்தியாளர் :- குற்றச்சாட்டுப் பட்டியலில் எத்தனைக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

பதில் :- நாற்பது.

செய்தியாளர் :- என்ன நாற்பது?

பதில் :- ‘இன்னா நாற்பது!’

- அதாவது நாற்பது குற்றச்சாட்டுகள்! ‘இன்னா நாற்பது’ - என்பது பதினெண் கீழ்க் கணக்கு நூல் வகையைச் சார்ந்த - அறமுரைக்கும் நூல். எது எது தீமையை உடையன என்பதை விளக்கும் நூல்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் குழப்பமும் தெளிவின்மையும்தான் எங்களுக்குத் தேவையென தமிழ் நாட்டு மக்கள் முடிவு எடுத்து அவரையே மீண்டும் முதல்வராக்கினார்கள். அதற்காக மக்களுக்கு செய்தியை விளக்கும் கலைஞரின் பேட்டியை தாங்கிய முரசொலி (23-6-1980) கம்பீரமாக வெளியாயிற்று. அத்தோடு எம்.ஜி.ஆர் மூகாம்பிகைக்கு ஒரு விசேஷ பூசையை செய்தார். அதற்கான செய்தியையும் கேலிச் சித்திரத்தையும் வெளியிட்டு அவரின் ‘கொள்கை’ எது என்பதை முரசொலி தோலுரித்துக் காட்டியது.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் இரண்டாம் முறையாக முதல்வரானப் பிறகும் தொய்வில்லாமல் தி.மு.க.வின் சக்தி வாய்ந்த ஏவுகனையாக திகழ்ந்தது முரசொலி! எம்.ஜி.ஆர் அரசியல் என்பதும் - சாதனை என்பதும் எக்கால கட்டத்திலும் இல்லையென்றாலும் ஜனநாயகத்தின் ‘பலவீனம்’ அவரை முதல்வராக்கி வேடிக்கை பார்த்தது. அவரோ எந்தவித இலட்சியப் பிடிப்பும் இல்லாமல் திராவிடர் இயக்க கொள்கைகளை சிதைப்பதிலே மட்டும் கவனமாக இருந்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையைகூட பொருளாதார அடிப்படையில் மாற்றுவதற்கான ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்தக் கட்டத்தில் முரசொலியின் பணி மகத்தானதாக இருந்தது. அக்கொள்கையை நிலைப்படுத்துவதில் தனது வெளியீடுகளின் மூலமாக முரசொலிப் போராடியது.

1980-84க்கும் இடையில் எம்.ஜி.ஆரின் சுயேச்சையான போக்கு தமிழகத்தை ஒருபுறம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் ஆதரவு அவருக்குப் பக்கபலமாக இருந்தது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்காகவோ நடைமுறைகளுக்காகவோ சிறந்த மக்கள் சேவை ஆற்றினார் என்பதற்காகவோ அவர் வெற்றி அடைந்து விடவில்லை. வெறும் பிரச்சாரம், அவர் மீது நம்பிக்கை என்பவைகளின் மீதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி நிச்சயிக்கப்பட்டிருந்தது. சிந்தனை, கொள்கை, நடைமுறை, தியாகம் ஆகியவைகளைப் பெற்றுள்ள தலைவனின் மீது ஏற்படும் கொள்கை டவ .ர்ப்பு, நம்பிக்கை என்றிருந்தது போக - தமிழ் நாட்டு மக்கள் வெறுமைக்குரிய எம்.ஜி.ஆரை பிரதானப்படுத்தினர். அந்த அவரது வெற்றியும் அனைத்து மக்களின் ஆதரவு பெற்றது அல்ல. குறைந்த விழுக்காடு மாறி விழுந்த வாக்குகளால் பெற்ற வெற்றியேயாகும். அதன் விளைவு கலைஞருக்கும், தி.மு.கழகத்திற்கும், பணிச்சுமை அதிகமாயிற்று. எந்தக் கட்டத்திலும் தி.மு.கழகத்தின் வாளும் கேடயமுமாக திகழுகின்ற முரசொலி முனை மழுங்காமல் பணியாற்றியது.

எம்.ஜி.ஆர் நோய் வாய்ப்பட்ட நிலையில் அவரை ஜனநாயக மரபுகளுக்கு புறம்பாக அரசியலில் ஒரு குழுவினர் இயக்கினர். மரபுகளைப் பற்றியும், விதிகளைப் பற்றியும் கவலைப்படாமல் அவரை முதல்வராக்கினர். அவரால் நாட்டின் பிரச்சினைகளைப் பார்க்க முடிந்ததா? கேட்க முடிந்ததா? செயலாற்ற முடிந்ததா என்றால் இல்லை. ஆனால் அவர்தான் ‘செல்வாக்குள்ள முதல்வராக’ இருந்தார். அதுதான் நமது நாட்டு ஜனநாயகத்தின் விளைவாக இருந்தது. இத்தகைய ஒரு அசாத்திய நிலையை எதிர்ப்பதில் ‘புரட்சிகர அரசியல்வாதிகள்’ கூட முன்வரவில்லை. அவரோடு எல்லாரும் ஒரு சமரசத்தை - உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். அது எதற்காக என்று வரலாற்று ஆசிரியர்கள் தான் ஒரு உண்மையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கலைஞரும் திராவிட முன்னேற்றக் கழகமும் முரசொலியியும் அவரை - அவரது அரசியலை வெளித்தோற்றம் - மயக்கம் என தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. அந்நிலையிலிருந்து - அப்பணியிலிருந்து முரசொலி தன்னை விலக்கிக் கொள்ளாமல் முழுமையாக டவ .டுபடுத்திக் கொண்டது. பிஜுயஅயீ பட்நாயக் மூலம் சமரசம் பேசப்படுகிறபோது கூட கலைஞரால் வைக்கப்பட்ட நிபந்தனைகளான நான்கு அம்சங்களும் இயக்கத்தை கட்சியை முக்கியப்படுத்தியதையே முரசொலி பெருமைப் பொங்க வெளியிட்டது. கலைஞர்தான் எம்.ஜி.ஆரை தி.மு.கழகத்தில் இணைத்தார். கலைஞரது முரசொலி (16-7-54) “இலட்சிய திரு விளக்குகள்” என்று தலைப்பிட்டு சிவாஜி கணேசன், டி.வி. நாராயணசாமி, கே.ஆர்.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., எம்.என். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களின் படங்களை வெளியிட்டுள்ளது. அதில் அவர்களது கருத்தாக்கமாக தி.மு.கழகத்தை, அண்ணாவை மிக நேர்த்தியான முறையில் வரவேற்று அவர்கள் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆர் கூறுவதாக வெளியிட்ட கருத்தாவது, “திராவிடன்’ என்று கூறிக் கொள்வதிலே நான் பெருமையடைகிறேன். திராவிட சமுதாயத்தின் மேன்மைக்கும் தாயகத்தின் விடுதலைக்கும் போராடும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே நானும் ஒரு உறுப்பினன் என்று சொல்லிக் கொள்வதிலே பூரிப்படைகிறேன். அறிவுப்படை தந்த அண்ணாவின் அணி வகுப்பிலே நானும் இருக்கிறேன் என்று எண்ணும்போது உற்சாகமடைகிறேன்” என்று முரசொலியில் வெளியாயிற்று. எம்.ஜி.ஆரைப் பற்றி முதன்முதலாக முரசொலி வெளியிட்ட செய்தியும் இதுதான்!

இதற்குப் பிறகு பல செய்திகள் அவரை உருவாக்குகிற - நிலை நிறுத்துகிற பணியை ‘முரசொலி’ செய்யலாயிற்று. முரசொலி மட்டுமல்ல. கலைஞரின் கைவண்ணத்தில் உருவான படங்களில் எம்.ஜி.ஆரின் பாத்திரப் படைப்பு அவரை ‘மாபெரும் மனிதனாக’ (ஹீரோவாக) உருவாக்க காரணமாயிருந்தது. இச்சூழ்நிலை உருவாகி வருகிறபோது எம்.ஜி.ஆர்க்கு ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தையும் கலைஞர் வழங்கினார். இதனால் மக்களின் திரட்சி எம்.ஜி.ஆருக்கென்று உருவாக காரணமாயிற்று.

எம்.ஜி.ஆர் இவ்வளர்ச்சியின் போக்குகளை கழகத்தில் ‘சோதித்துப்’ பார்த்தார். ஒரு கட்டம் வரை அது எடுபடவில்லை. அப்போதும் கலைஞரும் முரசொலியும் தமக்கே உரிய முத்திரையோடு காத்து நின்றனர். எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது முரசொலி பதட்டத்தோடு செய்தியை வெளியிட்டது. சொந்த செலவில் பல்லாயிரக்கணக்கில் துண்டறிக்கைகளை வெளியிட்டு - சென்னை நகரில் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பை போக்கியது. இதுபோல பல செய்திகளை சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் 1972-க்குப் பிறகு எம்.ஜி.ஆர் கழகத்தை அழித்தே தீருவேன் என ‘பரசுராம அவதாரம்’ எடுத்தபோது கழக மீட்சிக்கானப் போராட்டத்தில் உறுதியான ராணுவ வீரனைப் போல இயங்கியது முரசொலி! அதன் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற தற்போதைய போராட்டத்திலும் முரசொலி எந்தவித பின்னடைவும் அடையவில்லை.

முரசொலி எம்.ஜி.ஆர் ஆட்சியின் ஊழல்களை ஆதாரத்தோடு மக்கள் முன்னே எடுத்து வைத்தது. இதன் விளைவாக எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்திலேயே உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தி.மு.க. பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றியின் உள்ளடக்கத்தில் முரசொலிக்கும் பங்கு உண்டு. எம்.ஜி.ஆர் தி.மு.க.வையும் கலைஞரையும் அரசியலிருந்து அப்புறப்படுத்த நினைத்தபோதும் முரசொலி அவரது மரணத்தின்போது ‘செல்வாக்குள்ள முதல்வர்’ என கலைஞர் எழுதியதை வெளியிட்டு மனிதாபிமானத்தை வெளிக்காட்டிக் கொண்டது. கலைஞரும் அந்த அறிக்கையினால் மனிதாபிமானத்தின் உச்சிக்கே சென்றார்.

ஆனால் எம்.ஜி.ஆர் உருவாக்கி விட்டுச் சென்ற அவரது கட்சியினர் எம்.ஜி.ஆர் மரணமுற்ற அன்று அண்ணா சாலையில் உள்ள கலைஞரது சிலையை - கடப்பாரை கொண்டு தாக்கிப் பிளந்தனர். பெயர்த்தெடுத்துச் சென்றனர். இளைஞன் ஒருவன் கடப்பாரைக் கொண்டு கலைஞரின் சிலையைத் தாக்குகின்ற காட்சியை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு படமெடுத்து வெளியிட்டது. அதே படத்தை முரசொலி ஏடு கலைஞரின் கவிதையோடு வெளியிட்டது ஒன்றே முரசொலியின் பெருமையை பத்திரிகை உலகில் உயர்த்திக் காட்டிற்று. கலைஞரின் அக்கவிதை வரிகள் இதுதான் -

உடன்பிறப்பே,

         செயல்பட விட்டோர்

         சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

         அந்த சின்னத் தம்பி

         என் முதுகிலே குத்தவில்லை -

         நெஞ்சிலே தான் குத்துகின்றான்

         அதனால் நிம்மதி எனக்கு!

         வாழ்க! வாழ்க!!

 

அன்புள்ள

மு.க.

முரசொலி, இன்னா செய்தாரை இப்படித்தான் நன்னயம் செய்து காட்டிற்று.

டவ .வெ.கி. சம்பத் ஏற்படுத்திய பிளவை கொள்கை, நடைமுறை பற்றிய பிரச்சினைகளின் அணுகுமுறையாக முரசொலி ஏற்றுப் போராடியது. முரசொலி சம்பத் மீது வைத்த விமர்சனங்கள் அவர் இறுதியில் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டதால் சரியானது என்றே நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பிளவு அல்லது அவரின் நடவடிக்கைகளினால் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டதால் ஏற்பட்ட பிளவு என்பதை சம்பத் ஏற்படுத்திய பிளவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

இன்னும் சரியாக சொல்வதென்றால் தி.மு.க.வை எதிர்ப்பதற்காகவும் சிதைப்பதற்காகவும் அதன் தலைவரான கலைஞரை தனிமைப்படுத்துவதற்காகவுமே எம்.ஜி.ஆர் செயல்பட்டாரேயொழிய இந்நாட்டில் அரசியல் நடத்துவதற்காகவோ இந்நாட்டை நல்வழிபடுத்துவதற்காகவோ தி.மு.க.வைவிட அதன் கொள்கைகளை மேலும் செழுமையாக்கவோ புரட்சிகரமான முறையில் பரப்புவதற்காகவோ அவர் செயல்பட்டாரில்லை. இத்தகைய அழிவு வேலைக்காரரைத்தான் கலைஞர் தொடர்ந்து எதிர்க்க வேண்டியதாயிற்று. அதற்கு பக்கபலமாகவும் பெருந்துணையாகவும் முரசொலி இருந்தது.

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக அவர் உருவாக்கிய கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் போட்டிகள் உருவாயிற்று. ‘ஜா’ - ‘ஜெ’ என அணிகள் உருவாயின. தமிழ்நாடு சட்டமன்றம் ‘தெருச் சண்டை’ போடுகிற இடமாயிற்று. எப்படியோ ஜானகி முதல்வரானார். அவர் 23 நாள்கள் முதல்வராக இருந்தார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை நல்காமல் வழக்கம்போல் காலை வாரி விட்டுவிட்டது. ஜானகியின் ஆட்சி கவிழ்ந்தது. இக்கட்டத்தில் முரசொலியின் செயற்பாடும் அது மக்களுக்கும் தனது கட்சிக்காரர்களுக்கும் செய்திகளை வழங்கிய விதமும் ஜனநாயகத்தின் பலவீனங்களை எதிர்த்து இயக்கம் நடத்துவதுபோல் இருந்ததை என்றும் மறக்க முடியாது.

அ.இ.அ.தி.மு.க. (ஜா) ஆட்சி கவிழ்க்கப் பட்டதற்குப் பிறகு குடியரசுக் தலைவரின் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வாட்சியின்போது ஆளுநரின் போக்குகள் காங்கிரசு கட்சிக்கு - ஆளுநரின் சுயேச்சையான டவ .டுபாடுகளும் எப்படி ஜனநாயகத்திற்கு - குடியுரிமைக்கு புறம்பாக இருந்தன என்பதையும் முரசொலி விளக்கிற்று.

1989-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை தி.மு.க. சந்தித்து வெற்றியை டவ .ட்டியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. முன்னைய ஆட்சி ஊழல்களினால் கோடிக்கணக்கில் பொதுப் பணம் தனியார் கொள்ளைக்கு ஆளாகி இருந்ததை வெளிக்கொணர்ந்து அரசுக்கு சேர்த்ததை முரசொலி பொதுமக்களுக்கு எடுத்து விளக்கியது. தி.மு.க. அரசின் மக்கள் நல திட்டங்களை பிரச்சாரம் செய்தது முரசொலி! இக்கட்டத்தில் நடைபெற்ற (1989 நவம்பரில்) நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஓர் இடத்தைக்கூட பெற முடியவில்லை.

இதற்குப் பிறகும் கழகம் உயர்வே பெற்றது. மத்தியில் அமைந்த அரசில் ‘முரசொலி’ மாறன் அமைச்சரானார். இதுவும் முரசொலிக்குக் கிடைத்த பெருமையே ஆகும்.

தமிழ்நாட்டிலும் - தென்னகத்திலும் வகுப்புரிமை என்பது 1921 தொடங்கி நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிற ஒரு திட்டமாகும். இங்குள்ளவர்களுக்கு இது புதிய விஷயமல்ல. ஆனால் இந்திய அளவில் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படுவதற்கு மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஒரு கருவியாக அமைந்தன. அதற்குரிய நல் வாய்ப்பு தேசிய முன்னணி அரசு மத்தியில் அமைந்ததே ஆகும். அவ்வரசு வீழ்வதற்கும் அதுவே காரணமாயிற்று. ஏனெனில் உயர் வகுப்பாரின் கிளர்ச்சியும் தூண்டுதலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு எதிராக இருந்தன.

வி.பி. சிங்கின் தேசிய முன்னணி அரசு வீழ்ந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசுப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வை உயர்சாதி ஆணவம் விட்டு வைக்க எண்ணுமா? விளைவு தி.மு.க. அரசு, பெரும்பான்மை இருந்தும் கலைக்கப்பட்டு விட்டது.

இத்தகைய சூழ்நிலைகளில் முரசொலி மிகப் பெரிய கருத்துப் போரை நடத்திக் காட்டிற்று. அரசியல் சட்டம் 356வது பிரிவின்மீது தி.மு.க. வைத்த அத்தனை கருத்துக்களையும் முரசொலி வெளியிட்டது. அப்பிரச்சினைக்கு வலுவேற்ற பலரின் கருத்தாக்கங்களையும் அது தொகுத்து வழங்கியது. இப்பிரச்சினைக்கு முன்பும்கூட அது குறித்து முரசொலி பெரியதொரு விவாதத்தை முன் வைத்தது.

இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு 1991 - மே 21 இரவு ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். தேர்தலில் தி.மு.க.வுக்கு இருந்த வாய்ப்புகள் இதனால் சரிந்தன. தமிழகமெங்கும் திட்டமிட்டு கொலை நிகழ தி.மு.க.தான் காரணம் என பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது. கழகத் தோழர்களும், தேர்தல் அலுவலகங்களும் ஏன் முரசொலி அலுவலகமும் கூட கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காயிற்று.

ஆனால் முரசொலி தாக்குதல் காரணமாக ஒரு நாள்தான் வெளியிட முடியவில்லையே தவிர மீண்டும் களத்தில் இறங்கி தனது பணியை முரசொலி செய்யத் தொடங்கிற்று. ராஜீவின் படுகொலை தேர்தலை எப்படியும் பாதிக்கும் என்பது மிகவும் தெளிவான விஷயமாயிற்று. இருப்பினும் கலைஞர் ஒருவர் தான் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் துணிவாகத் தொடங்கினார். தி.மு.க மட்டும்தான் தேர்தல் பிரச்சாரத்தை தனியாக தொடங்கிற்று. சுற்றுப் பயண அறிவிப்புகள் வழக்கம் போல முரசொலியில் வெளியாயிற்று. தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே நம்மை துடைத்தெறிந்தன. பொய்யும் புனைச்சுருட்டும் வென்றன. சென்னை துறைமுகத் தொகுதியில் கலைஞர் ஒருவரே வெற்றி பெற்றார். தி.மு.க.வுக்கு வழக்கமாகக் கிடைக்க வேண்டிய வாக்குகளிலேயே சற்றொப்ப 12 சதவிகித வாக்குகள் குறைந்தன. தி.மு.க. அணி 75 லட்சம் வாக்குகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களை ‘அச்சம்’ கவ்விக் கொண்டது விளைவு ஜெயலலிதா முதல்வரானார்.

ஆம், தமிழகம் மீண்டும் இருட்டில் தள்ளப்பட்டு விட்டது. கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். ஏற்கனவே எழும்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அகால மரணமடைந்தார். அதனால் அத்தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. கலைஞர் பதவி விலகிய துறைமுகம் தொகுதிக்கும் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் கழகமே வெற்றி பெற்றது. அ. செல்வராசன், பரிதி இளம்வழுதி ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றனர்.

தமிழக சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி அமைய வாய்ப்பில்லாமல் போயிற்று. எல்லா கட்சியிலிருந்தும் ஓரிரு உறுப்பினர்களே வெற்றி பெற்றனர். எதிர்க்கட்சியென ஒரு அந்தஸ்தில் செயல்பட முடியாத ஒரு நிலையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி விட்டன. முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை பத்திரிகைகள் போக்க வேண்டும் என்று கூறினார். பத்திரிகைகள் அதன் இயல்புப்படியே எழுதின. முரசொலியும் தி.மு.க.வை முன்னிலைப்படுத்தி வழக்கம் போல் இயங்கியது.

ஆனால் முரசொலி தமிழக சட்டமன்றத்தின் உரிமையை மீறியதாக அதன் ஆசிரியர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிமைக்குழு முன்பாக அதன் ஆசிரியர் அழைத்து விசாரிக்கப்பட்டார். அதன் பிறகும் சட்டமன்றத்தின் முன்னே கூண்டு செய்யப்பட்டு அதில் நின்று வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று அவை பரிந்துரைத்தது. ஆசிரியர் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றும்கூட அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதலை ஏற்று ஆசிரியர் செயல்பட இருக்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டார். “அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது சபையில் ஆஜராக வேண்டும்” என சபாநாயகர் ஆசிரியரிடம் கடிதம் பெற்ற பிறகு அவரை விடுதலை செய்தார்.

ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை, மக்கள் விரோதப் போக்கை போர்க்குணத்தோடு எதிர்த்தது முரசொலி. தமிழக வராலாற்றில் கரும்புள்ளி என்று வர்ணிக்கும் அளவுக்கு அதிமுகவின் ஆட்சி அமைந்திருந்தது. ஜெயலலிதாவைவிட ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் எவ்வளவோ பரவாயில்லை என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதும் அளவிற்கு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.

அதிமுகவின் அக்கிரம ஆட்சியில், அக்கட்சியின் அரசி முதல் ஆண்டி வரை தொட்டில் முதல் சுடுகாடு வரை செய்த ஊழல்களை உலகிற்கு துணிவோடு தோலுரித்து காட்டியது முரசொலி. முரசொலியை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு சதிகளை செய்தது அதிமுக அரசு, ஆனால் அனைத்து சதியையும் முறியடித்து முன்பைவிட வலிமையோடு செயல்பட்டது முரசொலி.

மீண்டும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கலைஞர் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். எனினும் முரசொலி அதன் வேகத்தை, செயல்திறனை, சமுதாயப் பணியை, கழகத்தின் கொள்கைகளை, தி.மு.க. அரசின் மக்கள் நலப் பணிகளின் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைத்தது.

தற்போது மீண்டும் மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் ஆட்சிக் கட்டிலில் ஏறிய அதிமுக அரசு முன்பைவிட வக்கிரத்தோடு செயல்பட தொடங்கிற்று. குறுகில காலத்திற்குள் உலகின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து தமிழனும் வெட்கித் தலை குனியும் அளவிற்கு பல்வேறு இழிசெயலை நிறைவேற்றியது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.

கழகத்தையும், கழகத்தை கட்டி காக்கும் அதன் உடன்பிறப்புக்களையும், கழகத்தின் உயிர் மூச்சு கலைஞர் அவர்களையும், அவரை சார்ந்தவர்களையும் ஒழித்து விட வேண்டுமென்று திட்டத்தோடு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தார்கள்.

கலைஞர் கைது தமிழினத்தின் கறுப்பு தினம் ஆயிற்று, கழகப் பேரணியில் வன்முறை பொதுமக்களின் குலை நடுங்கச் செய்தது. எனினும் முரசொலி தளர்ந்து விடவில்லை. தொடர்ந்து வலிமையோடு போராடிக் கொண்டிருக்கிறது, போராடும்.

பத்திரிகையாளர்களை உலகிலேயே மிக கேவலமாக, அநாகரீகமாக நடத்திய பெருமை அதிமுக அரசையே சாரும். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், அதன் அலுவலகங்கள் சூறையாடப்படுவதும் அதிமுகவின் கொடுங்கோல் ஆட்சியில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

தற்போது தனி ஒரு மனிதனுக்கு தமிழ்நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை. அவர்களின் உயிர், உரிமை, உடைமை எப்போது வேண்டுமானாலும் அதிமுக குண்டர்களால், காவல்துறையில் உள்ள எடுபிடிகளால் பறிக்கபடக்கூடிய அபாயம், அச்சம் தமிழக மக்களிடையே கானப்படுகிறது. இவை அனைத்தையும் துணிவோடு படம் போட்டு உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது முரசொலி.

முரசொலி வியாபார நோக்கமுடைய பத்திரிகையல்ல. அது தி.மு.கழகத்தின் வாளும் கேடயமுமாக இயங்கி வருகிற ஏடாகும் என்பதினை இதுகாறும் விவரித்த நிகழ்ச்சிகளிலிருந்து அறியலாம். இனியும் முரசொலி அவ்வாறே இயங்கும்.

மொத்தத்தில் முரசொலியின் 60 ஆண்டுகால நிலைப்பாடு என்பது இப்படித்தான் இருந்திருக்கிறது. அதாவது,

முரசொலி துண்டறிக்கைகளாக வெளியிடப்பட்ட போதும் அது திருவாரூரிலே வார ஏடாக வளர்ச்சியுற்று வெளிவந்தபோதும் அதன் அடிப்படையான இயக்க கொள்கைகள் - பகுத்தறிவு வாதங்கள் என்றும் நீர்த்துப் போனதில்லை.

1954-லிருந்து 1960 வரை வெளியான (சென்னை பதிப்பு) முரசொலி வார ஏட்டில் அறிவு மணம் கமழும் பல கட்டுரைகளை காணலாம். அவைகளை இன்றும் படித்து சிந்தைக்கு விருந்தாய் ஆக்கிக் கொள்ளலாம்.

முரசொலி என்பது ஒரு வியாபார நோக்கமுடைய பத்திரிகையோ அல்லது செய்திகளை, இலக்கிய தாகமுள்ள விஷயங்களை மட்டும் பரிமாறிக் கொள்கிற பத்திரிகையோ அல்ல. ஒரு நீண்ட நெடிய வரலாற்றை உடைய அடிமைப்பட்ட ஓர் இனத்தினுடைய எழுச்சியின் முழு அடையாளமாக திகழுகின்ற பத்திரிகையாகும். அதன் உள்ளீடு பல கிளைகளை உடையது. ஆய்ந்தறிய ஆய்ந்தறிய புதுமையை நல்கும் சிறந்த கவிதையைப் போல ஆழமான வேர்களையும், விழுதுகளையும் உடையது. அதன் தோற்றம் பரந்து விரிந்த ‘நிழல்’ தரும் மாபெரும் ஆலமரத்தைப் போன்றது.

அத்தகைய இயக்கத்தின் காப்பரணாக திகழுவது முரசொலி ஏடு. முரசொலி நாளேடானதற்குப் பிறகு அதன் முழு டவ .டுபாடு அரசியல் ஆயிற்று எனினும் ‘சமுதாயத் துறையில் பகுத்தறிவை பரப்புவது’ எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாட்டை முரசொலி ஒருபோதும் புறக்கணித்ததில்லை. அதன் மீது நின்றே முரசொலி அரசியல் கருத்துக்களை நாளும் முழங்கி வருகின்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை தாங்கி வெளிவருகிற ஒரே நாளேடாக மாத்திரமல்ல - அக்கொள்கைகளுக்கு விளக்கமளிக்கிற - பொழிப்புரை தருகிற - மறுப்புக்கு மறுப்புரைக்கிற மிகச் சிறந்த படைக்கலனாகவும் திகழுகிறது முரசொலி!

தூங்கிய, தூங்கிக் கொண்டிருக்கும் தமிழனை முரசொலி (ஏடு) ஓசை தட்டி எழுப்பி தமிழினைத்திற்காக குரல் கொடுக்க வைக்கிறது.

அத்தகைய முரசொலியைப் போற்றுவோம்!

அதன் பயணம் தொடர துணை நிற்போம்!

வாழ்க முரசொலி!

வெல்க அதன் திறன்!!